Pages

Tuesday, July 20, 2010

ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர்

சென்னை, ஜூலை 19: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு "பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்" என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


இது குறித்து திங்கள்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:


சட்டப் பேரவை உறுப்பினர் அப்பாவு முயற்சியால் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ரூ. 77 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காமராஜரின் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று "ராதாபுரம் பேருந்து நிலையம்' என்ற பெயரை "பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம்' என்று மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் உண்ஹணாவிரதம் இருந்த சுடலைமுத்து, சிவாஜி முத்துக்குமார் ஆகியோர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகச் செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரச்னை முடிவுக்கு வந்தது: ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

வியாழக்கிழமை (ஜூலை 15) பெரம்பூரில் நடைபெற்ற காமராஜர் சிலை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ""நாங்களும் காமராஜர் ஆட்சிதான் நடத்துகிறோம் என்கிறார்கள். ஆனால், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள். நாங்கள் ஆங்கிலேயர்களின் சிறையையே பார்த்தவர்கள்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் காமராஜர் பெயரை சூட்டுமாறு முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

தங்கபாலு நன்றி

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட உத்தரவிட்டுள்ள முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், சகோதர, சகோதரிகள் சார்பிலும் நீண்டநாள்களாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

காமராஜரின் பெருமையை உணர்த்தும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு நன்றிகள். இதற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் காங்கிரஸ் தியாகிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment