Pages

Monday, July 19, 2010

சென்னையில் விபரீதம்-நடுவரைத் தாக்கி மண்டையை உடைத்த ஹாக்கி வீரர்

சென்னை: சென்னையில் நடந்த ஹாக்கிப் போட்டியில் முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் எக்கா, நடுவர் சூரிய பிரகாஷை தலையில் பேட்டால் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.


சென்னையில் அகில இந்திய முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று ஆர்மி லெவன் அணிக்கும், ஓஎன்ஜிசி அணிக்கும் இடையிலான போட்டி நடந்தது. இதில் முதல் பாதியில், ஓஎன்ஜிசி அணி முன்னிலை பெற்றிருந்தது. ஆர்மி லெவன் அணிதான் நடப்புச் சாம்பியன் என்பதால் அந்த அணியினர் பதட்டமடைந்தனர்.

இதனால் முரட்டு ஆட்டத்தில் அவர்கள் இறங்கினர். இதையடுத்து ஆர்மி அணியைச் சேர்ந்த பிரிதீந்தர் சிங்குக்கு 2வது முறையாக பச்சை அட்டை காட்டினார் நடுவர் சூரிய பிரகாஷ். அதேபோல ஓஎன்ஜிசி அணியின் முகேஷ் குமாருக்கும் பச்சை அட்டை காட்டி இருவரையும் வெளியேற உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆர்மி அணியைச் சேர்ந்த சுனில் எக்கா திடீரென நடுவருடன் சண்டையில் இறங்கினார். கடுமையாக வாதாடிய அவர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ஹாக்கி பேட்டால் நடுவரின் தலையில் ஓங்கி அடித்ுத விட்டார். இதனால் நிலை குலைந்தார் சூரிய பிரகாஷ். அவரது தலையில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் ஆர்மி அணி வீரர்களை எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தனர். நிலைமை விபரீமானது. உடனடியாக சூரிய பிரகாஷை அங்கிருந்து கொண்டு சென்றனர். வேறு நடுவர் வரவழைக்கப்பட்ட பின்னர் ஆட்டம் தொடர்ந்தது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஓஎன்ஜிசி வென்றது.

கடந்த 21 வருடங்களாக நடுவராக செயல்பட்டு வருபவர் சூரிய பிரகாஷ். கடந்த 1993ம் ஆண்டு சிறந்த தேசிய நடுவராக விருது பெற்றவர்.

இந்த சம்பவம் குறித்து சூரிய பிரகாஷ் கூறுகையில், கடந்த 21 வருடங்களாக நான் நடுவராக இருந்து வருகிறேன். ஆனால் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நாட்டில் எங்குமே நடந்ததில்லை.

சுனில் எக்கா இந்திய அணிக்க்காக ஆடியுள்ளார். ராணுவத்தில் இருக்கிறார். ஆனால் அவரிடம் அடிப்படையாக இருக்க வேண்டிய ஒழுங்கு இல்லை என்றார்.

சுனில் எக்கா மீது லெவல் 2 குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போட்டிக்கான இயக்குநர் முகம்மது முனீர் கூறுகையில், இந்தப் போட்டித் தொடரில் விளையாட முடியாத அளவுக்கு எக்காவைத் தடை செய்துள்ளோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அதேசமயம், இதுபோன்ற ஒழுங்கீனத்திற்காக ஆறு மாத காலம் வரை அவருக்கு தடை விதிக்க முடியும். ஆனால் இதை நாங்கள் செய்ய முடியாது. ஹாக்கி இந்தியாதான் இதை செய்ய முடியும்.

எக்காவின் செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஏற்கனவே தேசிய விளையாட்டான ஹாக்கி பல்வேறு சரிவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் விளையாட்டுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும் என்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment