டர்பன், ஜூலை 6: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியை ஸ்பெயின் சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாகக் கருதப்படும் ஜெர்மனியும், ஸ்பெயினும் அரை இறுதி ஆட்டத்தில் புதன்கிழமை மோதுகின்றன.
இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்பட்டாலும் ஜெர்மனியின் கையே தற்போது ஓங்கியுள்ளது. டி பிரிவில் இடம்பெற்றிருந்த கானா, ஆஸ்திரேலியா,செர்பியா ஆகிய அணிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு ஜெர்மனி தகுதிபெற்றது.
டேவிட் வில்லா
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மரடோனாவின் ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது ஜெர்மனி. இதில் 4 கோல்கள் அடித்ததோடு, ஆர்ஜென்டீனாவை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் ஓட ஓட விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
அரை இறுதிக்குத் தகுதிபெற்றுள்ள அணிகளில் மிகச்சிறந்த அணியாக ஜெர்மனி கருதப்படுகிறது. கடந்த போட்டிகளில் ஜெர்மனி வீரர்களின் ஆட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த ஆட்டம் அரை இறுதியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜெர்மனியின் மிரோஸ்லேவ் க்ளோஸ், லூக்காஸ் பொடால்ஸ்கி, ககாவ், பிரைடு ரிச் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
க்ளோஸ் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார்.
ஆர்ஜென்டீனாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது ஜெர்மனியின் முன்னணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அந்த ஆட்டம் இந்தப் போட்டியிலும் தொடரும் பட்சத்தில், அது ஸ்பெயினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும்.
ஸ்பெயின் அணியைப் பொறுத்தவரையில் டேவிட் வில்லாவை நம்பியே களமிறங்குகிறது. ஆரம்பம் முதலே அந்த அணி டேவிட் வில்லாவின் ஆட்டத்தாலேயே அடுத்தடுத்த சுற்றுக்குள் நுழைந்து, தற்போது அரை இறுதி வரை வந்துள்ளது. இரண்டாவது சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுகல்லை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது. காலிறுதியில் பராகுவேயுடன் போராடி வெற்றிபெற்றது.
அரை இறுதிக்கு வந்திருந்தாலும் பெரிய அளவில் கோல்களை அடிக்கவில்லை. ஒன்றிரண்டு கோல்களை மட்டுமே அடித்துள்ளது. ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா, ஜெல்சன் பெர்னாண்டஸ், ஷேவி பெர்னாண்டஸ், பெர்னாண்டோ டோரஸ் என முன்னணி வீரர்கள் இருந்தாலும், டேவிட் வில்லா, இனியெஸ்டாவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதளவில் ஜொலிக்கவில்லை.
இதனால் ஜெர்மனி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்கொள்ள ஸ்பெயின் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
2 comments:
//க்ளோஸ் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளார்.//
ஆமா!ஆளிள்ளாத இடமா பார்த்து நின்னுக்க வேண்டியது.பந்து கிடைத்தா உடனே கோல் செய்து விட வேண்டியது.க்ளோஸ் சிவப்பு கார்டு வாங்கி ஓட வேண்டிய ஆள்.மஞ்சக்கலரோட தப்பிச்சுகிட்டாரு:)
ஸ்பெயின் ஜெயிக்குதுன்னு ஆக்டோபஸ் சொல்லிடிச்சாமே அப்படியா?
//இதனால் ஜெர்மனி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தை எதிர்கொள்ள ஸ்பெயின் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். //
ஓடிக்களைக்கட்டும் ஜெர்மனி!ஸ்பெயின் போடப்போகுது கோல்.
Post a Comment