மும்பை: நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. நான்காவது ஐ.பி.எல்., தொடர் அடுத்து ஆண்டு ஏப்ரலில் நடக்க உள்ளது. இதற்கு முன் நடந்த 3 தொடர்களில், 8 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இதனால் 54 முதல் 60 போட்டிகள் வரை நடந்தன. தற்போது புனே வாரியார்ஸ், கொச்சி என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன.
இதை அடுத்து, வரும் 2011 ம் ஆண்டு நடக்க உள்ள தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருந்தது.
இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க, நேற்று மும்பையில் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதன்படி முதலில், பத்து அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதன் பின் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை விளையாடும்.
அதன்பின் மற்றொரு பிரிவில் உள்ள ஐந்து அணிகளுடன் தலா ஒரு முறை மட்டும் விளையாடும். இதனால் ஒவ்வொரு அணிக்கும் தலா 13 லீக் போட்டிகள் வீதம் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கும். அதன் பின் அரையிறுதி, 3வது இடம், பைனல் என 4 "நாக்-அவுட்' போட்டிகள் நடக்கும். இதனால் ஐ.பி.எல்., தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படும். இந்த புதியமுறை, அடுத்து வரும் மூன்று (2011-13) ஐ.பி.எல்., தொடரில் பின்பற்றப்படும்.
கடந்த மூன்று தொடரில் விளையாடிய எட்டு அணிகள், அடுத்து வரும் ஐ.பி.எல்., தொடர்களுக்கு தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மூன்று இந்திய வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மற்ற வீரர்களை ஏலத்தின்மூலம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் சீனிவாசன் கூறுகையில், ""அடுத்து வரும் மூன்று ஐ.பி.எல்., தொடர்களுக்கு மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் விளையாடும் படி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக இணையும் அணிகளும், திறமையான வீரர்களை தேர்வு செய்துகொள்ள வசதியாக, வீரர்கள் ஒப்பந்தம் முறையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment