Pages

Monday, September 20, 2010

என் கொள்ளுப்பேரன்கூட சினிமா தயாரிப்பான்! கருணாநிதி பேச்சு!

ஆமாம்... என் கொள்ளுப்பேரன்கூட சினிமா தயாரிப்பான். அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.


சுந்தர் சி, சினேகா நடித்திருக்கும் புதிய படமான முரட்டுக்காளை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட, நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

முரட்டுக்காளை என்ற இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் என்னுடைய பேரன் குணாநிதி. அவரே ஒரு முரட்டுக்காளை வீட்டில்! முரட்டுக்காளையாக வளர்ந்து, இப்போது சாதுவான பசுவாக ஆகியிருக்கிறார். முரட்டுக்காளையாக இருந்த அவரை கொஞ்சம் கொஞ்சமா பயிற்றுவித்து, சாதுவான பசுவாக ஆக்கிய அந்தப்பெருமை அவனுடைய தந்தை தம்பி அமிர்தத்திற்கு சேரும் என்று அந்த பாராட்டை நான் தம்பி அமிர்தத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப்படம் எத்தகைய வெற்றியை பெறும் என்பதை நான் இங்கே எடுத்துச்சொல்லாமலே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களோடு இணைந்த காட்சியை கண்டபோது, அந்த காட்சியிலே நான் கண்ட நடிக நண்பர்களுடைய, நடிகைகளுடைய நடிப்பை கண்டபோது நிச்சயமாக இந்தப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையை நானும் பெற்றேன். 

நண்பர் சுமன் இங்கே பேசினார். அப்போதுதான் வைரமுத்துவிடம் கேட்டேன். சுமனை எனக்கு நன்றாக தெரியும். `இப்படி தமிழ் பேசுகிறாரே, அவர் என்ன தமிழ்நாட்டுக்காரரா என்று கேட்டேன். `இல்லை இல்லை, ஆந்திராக்காரர் என்று சொன்னார். வேடிக்கை என்னவென்றால், ஆந்திராக்காரர் பேசுகின்ற அளவிற்கு நம்முடைய தமிழ் நடிகர்கள் சில பேர் பேசுவதில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கின்றது.

சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள்தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ் கொடியை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை. 

மருமகன் படம் எடுத்து படத்தயாரிப்பாளர், மகன் படத்தயாரிப்பாளர், பேரன் படத்தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் பட தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு பிறகு என்னுடைய கொள்ளுப்பேரன் கூட படத்தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை. படத்தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத்தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தொழில்தான்.


இன்று சினிமாத்துறை வளர்ந்து விட்டது. சினிமாத்துறையினரையும் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இன்றையதினம் சினிமாத்துறையிலே ஏற்கனவே இருந்த கஷ்டங்களையெல்லாம் போக்கி, தமிழ்நாட்டிலே உள்ள சினிமாப்படங்களுக்கு தமிழிலே தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்று வரியே இல்லாமல் செய்திருப்பதும் தி.மு.க. ஆட்சியிலே தான். 

அதனால் தான் தைரியமாக இன்றைக்கு பல பேர் படமெடுக்க வருகிறார்கள். இல்லாவிட்டால் முன்பெல்லாம் 100 ரூபாய் வசூல் என்றால் ஒரு தியேட்டரில் 90 ரூபாய் வரியாகப் போய் விடும். மிச்சமுள்ள பத்து ரூபாய் தான் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், படத்தை வெளியிடுகின்ற தியேட்டர்காரர் ஆகியோருக்கு கிடைக்கும். இப்போது அந்த வரியே இல்லை என்பதால் எல்லோரும் துணிந்து நம்பிக்கையோடு படங்கள் எடுக்கிறார்கள். அதனால் தான் திரைப்படத்துறையிலே பெரிய வளர்ச்சியை நாம் காண முடிகிறது.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

நிகழ்ச்சியில் படஅதிபர் ஏவி.எம்.சரவணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், நடிகர்கள் விக்ரம், சுந்தர் சி, பார்த்திபன், விவேக், சுமன், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட அதிபர் கருணாமூர்த்தி ஆகியோர் பேசினார்கள். 

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மருமகள் துர்கா ஸ்டாலின், மகன் மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment