Pages

Thursday, September 23, 2010

அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

போர்ட் எலிசபெத்:சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் அரையிறுதிக்கு ஜோராக முன்னேறியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது.


தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் சுற்றின் கடைசி போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதின. 

இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. "டாஸ்' ஜெயித்த சென்னை அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

சூப்பர் துவக்கம்:


சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் சூப்பர் துவக்கம் தந்தனர். வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது. 

இந்நிலையில், வாரியர்ஸ் அணி வீரர் கிருஷ் பந்து வீச்சில் மிரட்டினார். இவரது துல்லிய வேகத்தில், முரளி விஜய் வீழ்ந்தார். 


இவர் 35 ரன்கள் (2 சிக்சர், 3 பவுண்டரி) சேர்த்தார். அடுத்து வந்த ரெய்னாவையும் (6) சொற்ப ரன்களுக்கு வெளியேற்றினார் கிருஷ்.

ஹசி அரை சதம்: 

பின்னர் தோனி, ஹசியுடன் இணைந்தார். அரை சதம் பதிவு செய்த ஹசி போத்தா சுழலில் அவுட்டானார். இவர் 50 ரன்கள் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். மிடில் ஆர்டரில் பத்ரிநாத் (2), அனிருதா (7), கெம்ப் (0) கைகொடுக்க தவறினர். 


பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் தோனி 31 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 136 ரன்கள் எடுத்தது. வாரியர்ஸ் அணி தரப்பில் கிருஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஜேக்கப்ஸ் "அவுட்':

எளிய இலக்கை விரட்டிய வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் ஜேக்கப்ஸ் அதிரடி துவக்கம் தந்தார். பிரின்ஸ் (9) ஏமாற்றினார். ஜகாதி பந்து வீச்சை சிக்சருக்கு விரட்ட நினைத்த ஜேக்கப்ஸ் (32), ஹசி பிடித்த "சூப்பர் கேட்ச்சில்' வெளியேறினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த இங்ராம் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

அஷ்வின் அசத்தல்:


பின்னர் கிருஷ், பவுச்சர் இணைந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ரன் குவித்தது. மறுமுனையில் அஷ்வின், சுழலில் அசத்தினார். இவரது சுழலில், கிருஷ் (25), பவுச்சர் (25) வெளியேறினர். திசன் (1) ரன் அவுட்டானார். கடைசி ஓவரில், வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. முரளிதரன் பந்து வீசினார். 


முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2 வது பந்தில் போயே (1) அவுட்டானார். அடுத்து 3 பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில், திரான் (1) அவுட்டானார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வாரியர்ஸ் அணி, 126 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. போத்தா (12) அவுட்டாகாமல் இருந்தார்.

அரையிறுதியில் சென்னை: 

10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் தோற்றாலும், 109 ரன்கள் எடுத்தால், "ரன்-ரேட்' அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் வாரியர்ஸ் விளையாடியது. 

126 ரன்கள் எடுத்ததால், "ஏ'பிரிவிலிருந்து மற்றொரு அணியாக வாரியர்சும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை மைக்கேல் ஹசி தட்டிச் சென்றார்.

பெங்களூருடன் மோதல்:

நாளை டர்பனில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் அரையிறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment